You will be able to read this page in Tamil, if you have a Unicode Tamil font installed on your system.
சட்டைமுனி ஞானம்
எண்சீர் விருத்தம்
காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே. 1
தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே. 2
கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்
குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
மைந்தனே இவளை நீபூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே. 3
பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய்
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்
காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை
உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே ! 4
தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ?
தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்
சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே. 5
பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ?
பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ?
காழான உலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதனென்றால் மூலம்பாரே. 6
My other pages:
Last updated: 27th December, 1998.
Mail your comments to: Anbumani.
S