Site hosted by Angelfire.com: Build your free website today!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

தமிழ் கலாச்சாரத்திற்கு கோயிலின் பங்களிப்பு

இறை வழிபாடு என்பதில் மட்டுமல்ல, மொழி வளர்ச்சிக்கும் மீனாட்சி அம்மன் கோயில் ஆற்றியுள்ள பங்கு அளவிட முடியாதது. தமிழின் கூடாரமாக மீனாட்சிஅம்மன் கோயில் இருந்திருக்கிறது. இந்தக்கோயிலின் திருவிழாக்கள் அருகாமையில் இருக்கின்ற கிராமத்து மக்கள் எல்லாம் ஒன்று கூடி கொண்டாடப்படுவதாக உள்ளது. இவ்வாறு மண்ணின் மணத்தை விட்டுவிடாமல் பாதுகாப்பதிலும் மீனாட்சி அம்மன் கோயிலின் பங்கு குறிப்பிடக்கூடியது. கலைஞர்கள், ஓவியர்கள், கட்டிட நிர்மாணிகள், இசைஞர்கள், பாகவதர்கள் ஆகியோருக்கு புகலிடமாகவும், அந்தக்காலத்தைப் போலவே, தற்காலத்திலும் அந்த நுண்கலைகளின் வளர்ச்சியில் இந்தக் கோயில் பெரும் பங்கு வகிக்கிறது.பழங்காலத்தில் இக்கோயிலின் கோபுரங்களை கணக்கில் கொண்டு 'நான்மாடக்கூடல்' (நான்கு கோபுரங்களின் ஒருங்கிணைப்பு) என்று அழைக்கப்பட்டது. சிவனே மதுரை என்ற பெயர் வைத்ததாகக் கூட மக்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

 

இந்தக் கோயிலின் கட்டுமானம் பலகாலங்களில் பல பாணியில் முடிக்கப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள வனப்பு மிக்க கட்டிடக்கலை 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்டது. எனவே திராவிடக் கலைப்பாணிக்கு சக்தி மிகுந்த சாட்சியாக இந்தக் கோயில் திகழ்கிறது. திராவிடக் கலைப்பாணியின் அனைத்து அம்சங்களும் இந்தக் கோயிலில் இருக்கிறது. இந்தக் கோயிலை முதன் முதலில் பார்க்கும் போது சற்று குழப்பமும், சில சமயங்களில் தலை சுற்றலும் ஏற்படுவது இயற்கை. ஆனால் மிகச் சிறந்த கலைக்கூடமாக இந்தக் கோயில் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள உங்களது அடுத்தடுத்த பயணங்கள் கண்டிப்பாக உதவும். முதன் முறையே எல்லா படைப்புகளும் அங்கீகரிக்கப்படுவதில்லையே. பாரதியின் செந்தமிழ்நாடெனும் போதினிலே என்ற பாடலுக்கே அவரது காலத்தில் மூன்றாம் பரிசுதானே கிடைத்தது.

 

அதே போல இக்கோயில் உட்பட்ட தென்னிந்தியக்கோயிலுக்கு இந்தியர்களால் தக்க மதிப்பு அளிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. கட்டிடக்கலை என்பதை மட்டுமே மனதில் கொண்டு விமர்சித்தால் அது நன்மை அளிக்கும். வடஇந்தியக் கட்டடக்கலை என்பதை ஒரு தராசாக வைத்து தென்னிந்தியக் கட்டடக்கலையை விமர்சித்தால் அது எப்படி ஒரு ஆரோக்கியமான கருத்தாக அமையும்? கோயிற்கட்டிடக்கலை பயில விரும்பி வரும் வெளிநாட்டவர்கள், தென்னிந்தியக் கோயிலின் எரியும் கற்பூரம், திருநீறு, கோவிலில் வீசும் மெல்லிய பூ மற்றும் சந்தனத்தின் மணம் சுற்றிலும் உயர்ந்திருக்கும் கோபுரங்கள் அவர்களது ஆர்வத்தை அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள்.