Site hosted by Angelfire.com: Build your free website today!
 

 

 

"கல்முனை இஜாபத்"
எண்ணக் குவியல்கள்!


எனது சிந்தனையில் அவ்வப்போது உதிப்பவற்றைக் குறித்து வைப்பது என் வழமை! அப்படிக் குறித்து வைத்தவை பல, மூன்று தசாப்தங்களின் முன்னர் ஏற்பட்ட பயங்கர சூறாவளி அனர்த்தத்தால் அள்ளுண்டு போயின! எனவே, இனியும் இருப்பவற்றையாவது இழக்காது இருக்க வேண்டுமே என்ற கவலையில் இதனை இவ் வலைப் பின்னலில் சேர்த்து வைக்கின்றேன்,  சேகரமாய் இருக்குமென்ற அசையா நம்பிக்கையில்!

விரும்பிய தலைப்புகளைக் ''க்ளிக்'' செய்து இன்புறுக!


u  கவிதைகள் uuu

இற்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். இன்று வரை அது தொடர்கின்றது. எனது ஆரம்ப கால கவிதைகள் 1978ல் ஏற்பட்ட சூறாவளியில் அள்ளுண்டு போயின. அந் நாட்களில் பத்திரிகைகளில் பிரசுரமாயிருந்தவைகளின் "கட்டிங்"குகள் கூட என் கையை விட்டு எப்படியோ நழுவிப் போய் விட்டன. பழைய பத்திரிகைகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் வயதும் ஆற்றலும் இப்போதில்லை. எனவே, என் நினைவில் நின்றிருப்பவற்றை மட்டும் "இளமைக் கவிதைகள்" எனும் பிரிவில் இங்கே பின்னலாகின்றன. ஆயினும், அதன் பின்னர் எழுதப்பட்டவை இங்கே பின்னியுள்ளன. இடையில் சில காலங்கள் ஆய்வு முயற்சிகள், தோல்விகள், விரக்திகள் காரணமாக கவிதைகளை வடிக்க முடியாவிட்டாலும் அவ்வப்போது தோன்றியவற்றை பதிந்து வைக்க மறப்பதில்லை. அவ்வாறானவையே இங்கே காட்சியளிக்கின்றன.

u  சிறுகதைகள் uuu 

1962 என்று நினைக்கின்றேன்,(அல்லது ஒன்றிரண்டு முன்னப் பின்னர் இருக்கக் கூடும்!)எனது முதல் சிறுகதை "சிரித்திரன்" பத்திரிகையில் பிரசுரமாயிருந்தது. அப்போது எனக்கு வயது பத்துத்தானிருக்கும்! (அல்லது ஒன்றிரண்டு கூடக் குறைய இருக்கலாம், சரியாக ஞாபகம் இல்லை!) அக் கதை பிரசுரமாயிருந்தபோது நான் அடைந்த ஆனந்தத்திற்கோர் அளவேயில்லை! அதனைத் தொடர்ந்து சிறிது சிறிதாக எழுதினாலும் ஏனைய பத்திரிகைகள் அவை எவற்றையுமே கண்டு கொள்ளவில்லை. (சின்னஞ் சிறு வயது காரணமாய் இருந்திருக்கலாம்!) அதனால் எனது ஆர்வம் குன்றிப்போய் விட்டது! ஆயினும், அவ்வப்போது "கையெழுத்துப் பத்திரிகைகளை நானே உருவாக்கி, அவற்றில் எனது ஆக்கங்களை வெளியிட்டு வந்திருக்கின்றேன். அதன் பின்னர், கவிதைத் துறையில் 1966களில் காலடியெடுத்து வைத்தேன். மீண்டும் சிறுகதைத் துறையில் எனது மீள் பிரவேசம், 1970களில் சிறுவர்களுக்கான கதைகளாக ஆரம்பித்தது. "துப்பறியும் சீ.ஐ.டி. பூனையார்" எனும் தலைப்பில் பல மாதங்கள் தினகரன் "சிறுவர் பகுதி"யில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பின்னர் ஏற்பட்ட சில தொழில் முயற்சிகள், ஆய்வு முயற்சிகள், தோல்விகள், பின்னடைவுகள், விரக்திகள் காரணமாக எழுத்துத் துறையிலிருந்து சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னைச் சற்று தூர விலக்கி வைத்துவிட்டன. ஆயினும், இப்போது சற்று ஓய்வும் நிம்மதியும் நேரமும் கிடைத்துள்ளதால் மீண்டும் சிறுகதைத் துறையில் இறங்கியிருக்கின்றேன். எனது சிறுகதைகள் இனிமேல் தொடர்ந்து வலைப் பின்னலில் உலா வரும்!

u  ஆய்வுக் கட்டுரைகள் uuu

சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள், வற்புறுத்தல்கள் என்னை ஓர் ஆசிரியனாக ஆக்கிவிட்டன. (இதைத்தான் விதி என்பார்கள் போலும்!) அதனால், கல்வித் துறையில் மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாக "விருப்பின்றியே" காலத்தைக் "கடத்த" வேண்டியதாயிற்று! ஆயினும், இடையிடையே எனது தொழில் முயற்சிகள்,ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளில் ஈடுபட மறப்பதில்லை! இவ்வாறு எனது "காலம் கடத்த"லால் அத் துறையில் பல அனுபவங்கள் ஏற்பட, அதில் நிறையவே ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்ற ஆர்வமும், தேவையும், அவசியமும் எனக்கு ஏற்பட்டது. எனவே, பல ஆய்வுகளில் இறங்கினேன். அதன் விளைவுகள், முடிவுகளை ஆய்வுக் கட்டுரைகளாக இங்கே பின்னியுள்ளேன், வலையிலே!

Back to Blog

விரைவில் அச்சேறவுள்ளவை!

u  சிந்தனைக் கட்டுரைகள் uuu

ஏனோ எனக்கு இந்த சமுதாயத்தின் போக்குகள், சிந்தனைகள், நடைமுறைகள் ஒத்துப்போவதில்லை! சிறு பராயத்திலிருந்தே பிரபல சிந்தனையாளர்களான "இமாம் கஸ்ஸாலி, அறிஞர் அப்துர் றஹீம், மு.வரதராசன், தமிழ்வாணன்" போன்றோரின் ஏராளமான புத்தகங்களை வாசித்துப் பழகியதின் தாக்கமோ என்னமோ தெரியவில்லை. அதனால், அடிக்கடி இச் சமுதாயத்தின் போக்குகள் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதுண்டு; கவலைப்பட்டுக் கொண்டிருப்பதுண்டு! அதன் விளைவே இச் சிந்தனைச் சிதறல்கள் ஆகும்!

u  விஞ்ஞான விளக்கக் கட்டுரைகள் uuu

சின்னஞ் சிறு வயதிலிருந்தே இந்தியாவிலிருந்து அந் நாட்களில் வந்துகொண்டிருந்த "கலைமகள், மஞ்சரி, கலைக்கதிர்" போன்ற பத்திரிகைகளை வாசித்த பழக்கம் காரணமாக சில விஞ்ஞான விளக்கங்கள் அப்போதிருந்தே எனக்குக் கிடைத்திருந்தன. அந்த அறிவின் காரணமாக, 1970களில் தினகரன் பத்திரிகையின் "சிறுவர் பகுதி"யில் பல மாதங்கள் தொடர்ச்சியாக "விஞ்ஞான விளக்கக் கட்டுரைகள்" எழுதி வந்தேன். அவ்வாறான விஞ்ஞான விளக்கங்களை இனியும் இவ் வலைப் பின்னலில் பின்னவுள்ளேன்!

u  அனுபவக் கட்டுரைகள் uuu

வாழ்க்கையில் எல்லோருக்கும் அனுபவங்கள் ஏற்படுவது இயற்கையே! எனக்கும் அனுபவங்கள் ஏற்பட்டனதான்! ஆயினும், அவை சற்று வித்தியாசமானவையாக தென்பட்டதால் அவற்றை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொண்டால், அவை அவர்களுக்கும் சிலவேளை பிரயோசனம் அளிக்கக் கூடும் அல்லவா என்பதால் இங்கே அவற்றை பிரசுரிக்கின்றேன்!

u  ஆராய்ச்சிக் கட்டுரைகள் uuu

எனது சிறு பராயமே ஆராய்ச்சியில்தான் ஆரம்பமாகியுள்ளது போலும்! அதனால் என்னைக் குடும்பத்தார், "இஞ்சினியர், இங்கே வாடா!" என்றுதான் அழைப்பார்கள்! அவ்வாறு தொடங்கிய எனது வாழ்க்கை, என்னை எப்போதுமே எதையாவது ஆராய்ந்து கொண்டே இருக்க வைத்துவிட்டது! அப்படியான முயற்சிகள் சிலவற்றை இதில் பதிவுசெய்து கொள்ள ஆசைப்படுகின்றேன்!

u  எனது கண்டுபிடிப்புக்கள் uuu

எனக்கு எப்போதுமே "சும்மா" இருப்பதென்பது பிடிக்காத ஒரு விடயம்! எனது வாழ்க்கை எனும் அகராதியில் "சும்மா" என்ற வார்த்தையே கிடையாது! எத்தனை தடவைகள் சுகவீனமாய் இருந்த வேளைகளிலும் கூட நான் "சும்மா" இருந்ததில்லை! எதையாவது கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பேன். எனது சுபாவம் அப்படி அமைந்து விட்டது போலும்! பல முயற்சிகள் படுதோல்வியில் முடிந்தாலும் பெரும்பாலானவை வெற்றியடைந்துள்ளன. ஆயினும், பொருளாதாரம் காரணமாக நடைமுறைப்படுத்த முடியாதவைகள்தாம் அநேகம்! அவற்றைப் பற்றியெல்லாம் நேரம் கிடைக்கும்போது இப் பகுதியில் பதிந்து கொள்ள முயற்சிக்கிறேன்!

u  எதிர்காலக் கனவுகள் uuu

எல்லோரும்தான் கனவு காண்கின்றார்கள். நான் மட்டும் காணக் கூடாதா, என்ன? ஆயினும், அவை எதிர்காலக் கனவுகளாக பலரிடம் அமைவதில்லை. எனக்கும் சில எதிர்காலக் கனவுகள் உள்ளன. அவற்றை முடிந்தளவு இங்கே பதிந்து வைத்தால், என்னால் நிறைவேற்ற முடியாவிட்டாலும், எனது பிற் சந்ததியினராவது நிறைவேற்ற முயற்சிக்க மாட்டார்களா என்ற நப்பாசையில் இங்கே பதிந்து வைக்க எண்ணுகின்றேன்!


Back to Blog