மகான்களின் வரலாறு - 39
ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகள்
சென்னை சிநேகிதி பகுதியில் ஆலயம் செப்டம்பர், 2006 இதழில் வெளியானது.
புதுக்கோட்டை என்றதும் நம் நினைவுக்கு வருவது புவனேஸ்வரி தேவிதான். புதுக்கோட்டை அதிஷ்டானம் என்றதும் நம் நினைவில் நிழலாடுபவர் சாக்ஷாத் பரமேசுவர்னைப் போல் ஜடாமுடியுடன் காட்சி தரும் ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகளே!
பெயருக்கேற்றார் போல் முகத்தில் சாந்தமும், அருளும் பெருக, புன்னகை தவழக் காட்சியளிக்கும் சுவாமிகள், அவதூதரான ஜட்ஜ் சுவாமிகள் எனப்படும் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சீடராவார். அவரே புதுக்கோட்டை அதிஷ்டானத்தை புகழ் உச்சிக்கு ஏற்றிய மகான். நடமாடும் புவனேஸ்வரி என்று பெயர் பெற்ற ஞானி. அதிஷ்டானத்தில் மகா பெரிய யாகங்களையும், யக்ஞங்களையும் நடத்தியவர்.
சேலத்தில் உடையாப்பட்டி என்ற இடத்தில் ஸ்கந்தாஸ்ரமம் என்ற ஆலயத்தில் மெகா உருவத்தில் பத்தடிக்கு மேற்பட்ட உயரத்தில் கணபதி, தண்டாயுதபாணி, அஷ்ட தசபுஜ மகாலக்ஷ்மி, தன்வந்திரி, பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று அத்தனை தெய்வங்களையும் உருவாக்கி பல யாகங்களை நடத்தியவர்.
அன்னை மீனாட்சி அருளாட்சி செய்யும் மதுரையின் அருகிலுள்ள அழகாபுரி எனும் சிற்றூரில் ஒரு அந்தணக் குடும்பத்தில் 1921ம் ஆண்டு ராமசாமி என்பவருக்கு பத்தவது குழந்தையாக சுப்ரமண்யம் என்ற பெயருடன் அவதரித்தார் சாந்தானந்த சுவாமிகள்.
பள்ளிக்குச் சென்ற, சுவாமிகளுக்கு, படிக்காமலே பாடங்கள் மனப்பாடம் ஆகி விடும். மற்ற நேரங்களில் மீனாட்சியின் ஆலயமே அவரின் இருப்பிடமாயிற்று. பெற்றோர் அவரை வேத பாடசாலையில் சேர்த்தனர். சுப்ரமண்யம் வேதம் பயின்றதோடு மகாத்மாவின் தேச சேவையில் ஈடுபாடு கொண்டார். அதன் விளைவாக சிறைவாசமும் செய்தார்.
விடுதலை பெற்று வெளிவந்தவர் மகான் மாயாண்டி யோகி என்பவரிடம் புவனேச்வரி மூல மந்திர தீட்சை பெற்றார். அதன் பின் தென்னாட்டில் திருப்பதி முதல் நெல்லையப்பர் ஆலயம், பழனிமலை, கொல்லிமலை, வெள்ளியங்கிரி, குற்றால குகை என்று பல இடங்களில் அன்னையின் ஏகாக்ஷர ஜபம் செய்து, பிக்ஷை ஏற்று தவக்கனல் ஏற்றுவித்தார். பின் வடக்கே யாத்திரை சென்றார். ரிஷிகேசத்தில் சுவாமி சிவானந்த மகராஜ் ஆசிரமத்தில் தங்கி அவருக்கு கைங்கரியம் செய்தார்.
அடிக்கடி தனக்குள் ஒலிக்கும் குருவின் குரலைக் கேட்டு அவரைத் தேடி அலைந்தார். அவதூதர்களில் மூலவரான ஸ்ரீதத்தாத்திரேயர் ஆலயம் குஜராத்தில் கிர்நார் மலையில் உள்ளது. அதனை தரிசிக்க எண்ணியவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
அச்சமயம் அங்கு பிரசன்னமான ஒரு யோகி, ஒரு மாத்திரையைக் கொடுத்து, அதை வாயில் அடக்கிக் கொண்டு மேலே ஏரச் சொன்னார். என்ன அதிசயம்? காடுகள் அடர்ந்த மலையேறி, ஸ்ரீதத்தபாதுகா பீட தரிசனம் பெற்று, தியானத்தில் அமர்ந்தபோது 'உன் குரு சேலம் அருகில் சேந்தமங்கலத்தில் உனக்காகக் காத்திருக்கிறார்' என்ற குரல் ஒலிக்க, சேலம் நோக்கி வந்தார்.
சேந்தமங்கலத்தில் சன்யாசிக்காடு என்ற குன்றில் ஜட்ஜ் சுவாமிகளின் சீடரான ஸ்ரீமத் ஸ்வயம்பிரகாச ப்ரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் தத்த ஆலயம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்திருந்தார். அவரைத் தேடி வந்த சுப்ரமண்யம் அவரே தன்னை அழத்த குரு என உணர்ந்து காலில் விழுந்தார். தத்த சம்பிரதாயப்படி அவரால் உபதேசம் பெற்று, சாந்தானந்தா என்ற நாமம் பெற்றார்.
"ஒரு வருடம் கடினமெளனம் ஏற்று பிட்சை பெற்று உண்பாயாக. புதுக்கோட்டை சென்று அதிஷ்டானப் பொறுப்பு ஏற்றுக் கொள்" என்று உத்தரவிட்ட குருவின் சொற்படி புதுக்கோட்டை அதிஷ்டானத்தில் இரவு பகல், மழை வெயில் பாராது தங்கினார். அதிஷ்டானத்திற்கு வரும் அன்பர்கள் சாந்தானந்தரின் தேஜஸ் கண்டு வியந்து உணவு அளித்தனர். அதிஷ்டானம் அன்பர்கள் ஆதரவில் புதுப்பொலிவு பெற்றது.
அதிஷ்டானப் பொறுப்பை சீடரிடம் ஒப்படைத்த ஸ்வயம்பிரகாசர் 1948 டிசம்பர் 29ல் மகாசமாதி அடைந்தார். சாந்தானந்தர் தன் குரு அமர்ந்திருந்த குகையை செப்பனிட்டு, மகத்தான ஸ்ரீசக்ர பீடம் நிறுவினார். புதுக்கோட்டை அதிஷ்டானம் விரிவுபடுத்தப்பட்டு, 1956ல் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.
தமிழகத்தில் எங்குமில்லாத விதமாக அன்னை புவனேச்வரிக்கு ஆஸ்தான பீடமும், கலையழகு மிக்க சிலாவடிவமும் உருவாக்கினார். அன்னைக்கு அழகிய சிங்காதனமும் மேருவும் செய்தார். அன்று ஜன நடமாட்டமே இல்லதிருந்த அவ்விடம் இன்று புவனேச்வரி சகர் என்று கூரப்படுகிறது. இங்குள்ள விசேஷம், தனிமனித விருப்பத்திற்கு இங்கு அர்ச்சனையும், அபிஷேகமும் கிடையாது. உலகக்ஷேமம் கருதுயே அனைத்தும் நடை பெறுகின்றன. சதா அங்கு ஹோமங்கள் நடை பெறுவதாலேயே அவ்வூர் சுபிட்சமாக இருக்கிறது.
சாந்தானந்தரின் நெஞ்சத்தில் கனவு போல தோன்றிய, மலைகளும், அருவிகளும் நிறைந்த சிறிய குன்றே இன்று சேலம் அருகில் ஸ்காந்தாசிரமமாக மாறியுள்ளது. உடையாப்பட்டி குன்றில் அமைந்துள்ள ஸ்கந்தாசிரம்த்தில் நல்ல விசாலமான மண்டபம், வேதபாடசாலை, ஆசிரமத்தார் தங்குவதற்கு கூடங்கள் எல்லாம் கட்டப்பட்டு 1971ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்கந்தனின் 'ஸ்கந்த குரு கவசம்' சாந்தானந்த சுவாமிகள் அருளியதே ஆகும். சென்னை கிழக்கு தாம்பரத்தில் ஒரு ஸ்கந்தாஸ்ரமம் நிறுவி இறை உணர்வைப் பெருகச் செய்தார் சுவாமிகள்.
தம் வாழ் நாள் முழுவதையும் குரு சேவை, இறை சேவை, மக்கள் சேவை என்றே அர்ப்பணித்த ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள்27/05/2002ம் ஆண்டு ஜீவன் முக்தி அடைந்தார். அவரது விருபப்படி அவரது அதிஷ்டானம் ஸ்ரீஸ்காந்தாஸ்ரமத்தில் உள்ளது.
சுவாமிகளால் உருவாக்கப்பட்ட ஸ்ரீபுவனேச்வரி பீடத்தையும், ஸ்ரீஸ்கந்தாமஸ்ரமத்தையும் வாழ்வில் ஒரு முறையாவது அனைவரும் தரிசித்திடல் வேண்டும். ஸ்கந்தாசிரம்த்தில் 'ஏமனமே' என அழைத்து எழுதப்பட்டுள்ள சுவாமிகளின் அருள் வாக்குகளைப் படித்து நம் இதயத்தில் அறியாமை நீங்கி அறிவொளியைப் பெற்றிடல் வேண்டும்.